தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி அவர்களின் எதிர்பாராத மரணம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழலில், அவர்களுக்காக சளைக்காமல் போராடும் மனத்துணிவு கொண்ட சிவசாமி அவர்கள் மரணமடைந்திருப்பது பேரிழப்பாகும்.
டாக்டருக்குப் படித்தவரான சிவசாமி தன்னை முழுமையான விவசாயிகளின் தோழனாக்கிக் கொண்டு, நாராயணசாமி நாயுடு அவர்களுடன் இணைந்து நின்று போராட்டக் களம் கண்டவர். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1989ல் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அமைந்ததும், இந்தியாவுக்கே முன்னோடியாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு சிவசாமி அவர்கள் பங்கேற்ற போராட்டத்திற்கு வெற்றிப் பரிசை அளித்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் மீதும், என் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்ட சிவசாமி அவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் 29-4-2016 அன்று என்னை அவர் சந்தித்த போது, கழகம் ஆட்சி அமைய வாழ்த்து தெரிவித்ததுடன், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையாவிட்டாலும் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுப்பதை தி.மு.கழகம் நிறுத்திவிடவில்லை.
இந்நிலையில், சிவசாமி அவர்கள் காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது. அவரை இழந்த வாடும் குடும்பத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், விவசாயிகளின் நலனுக்காக சிவசாமி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.