அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ரோச்சஸ்டன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் காஜா மொய்தீன், நிர்வாக இயக்குனர் ஹாசிம் ஆகியோர் நேற்று(24.06.2016) தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது, ‘தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதினை கலைஞர் கருணாநிதிக்கு அவர்கள் வழங்கினார்கள்.
ரோச்சஸ்டன் நிறுவனம், ஆண்டுதோறும் உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் இந்த விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ள விருதில், ‘‘50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் போற்றுதலுக்குரிய தலைவராகவும், அரசியல் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், மொழி அறிஞராகவும், பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கப்பட்டபோது, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.