“சட்டமன்றம் என்ன” “பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா…?
ஒரு நிகழ்வில் பத்திரிகை மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம், “சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டாதது பற்றி” என்ற கேள்வியை முன் வைத்த பொழுது அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், “தமிழக அரசு சட்டப் பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று பக்குவத்துடன் ஒரு மூத்த அரசியல் தலைவராய், தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிக மூத்த உறுப்பினராய் உள்ள தலைவர் கலைஞர் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு பதில் அளித்தார். ஆனால் அந்த ஒற்றை வரி பதிலுக்கு பல பக்கங்களில் யாரோ எழுதிக் கொடுத்ததை தன் கையெழுத்தைக்கூட நிமிர்ந்து போட வக்கற்ற சுய மரியாதைச் சுடரொளி, தன்மான வீரன், டெம்போ டிராவலர் வாகனத்தின் டயரைக்கூட வீழ்ந்து வணங்கும் மனித நேய பண்பாளர், பினாமி ஆட்சி யின் “பொம்மை” முதல்வர் பன்னீர் அவர்களே, உங்கள் அறிக்கையில் ஏதோ சொலவடையெல்லாம் பயன்படுத்தியுள்ளீர்கள், மகிழ்ச்சி. ஆனால் உங்களை நினைத்தவுடன் எனக்கு ஒரு வரி நினைவுக்கு வருகின்றது. அது என்ன தெரியுமா?
“நக்கிக் குடி அதையும் நல்லதென்று சொல்”
இது என் சொந்த வரி அல்ல… பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகள். உங்களுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றது. ஆமாம் பன்னீர் அவர்களே, தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ் தைக் கூட மக்கள் வழங்கவில்லை என்று கூறியுள்ள, நீங்கள் உங்கள் கட்சியின் வரலாற்றை என்றாவது திரும்பி பார்த்தது உண்டா? உங்கள் தலைவி, ஊழல் குற்றவாளி அம்மையார் ஜெயலலிதா வை எங்கள் கழகத்தின் கடைமட்டத் தொண்டன் தேர்தலில் தோற்கடித்த வரலாறு உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். ஒரு தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எந்த இயக்கத்தையும் முடக்கிப் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வரிகளில் சொன்னால்,
“மூன்றாண்டு காலம் தி.மு.கழகம் ஆட்சியில் இல்லை, ஆனால் எல்லா பத்திரிகைகளிலும் தலைவர் கலைஞரும், கழகமும்தான் தலைப்புச் செய்தி”.
தலைவர் கலைஞர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்றால் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அவரின் கடமை கையெழுத்து போடுவது மட்டும்தான் என்றும் அதுவும் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்றெல்லாம் ஒரு முதலமைச்சருக்கு உரிய கண்ணியத்தை இழந்து அறிக்கை விட்டிருக்கும் “பொம்மை” திரு.பன்னீர் அவர்களே, ஒரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அதுவும் உங்களுக்கு நேரடியாக தொடர்புடைய வரலாறு.
தலைவர் கலைஞர் என்ன, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா போல தேர்தலில் தோற்றுவிட்டால் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் ஓய்வு எடுப்பவரா ?
மக்களைப் பற்றி சிந்திக்காமல், தன் தோழியையும் அவர் சகாக்களையும் மட்டும் நினைத்துப் பார்க்கின்ற படுபாதக செயலை செய்வது யார்? தலைவர் கலைஞர் எல்லா காலங்களிலும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந் தாலும் சரி, மிக சிறப்புடன் செயல்பட்டவர் என்பது வரலாறு.
சட்டமன்றக் கையெழுத்து
சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் கையெழுத்து போடுவது என்பது பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்று கெக்கலி கொட்டியுள்ள தாங்கள் ஒரு கணம் கடந்த கால ஆட்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த தி.மு.கழக ஆட்சியில் உங்கள் ஊழல் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமலும், சட்டமன்ற வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் தொடர்ந்து இருந்ததையும் நாடு அறியும். ஆனால் நீங்கள் அறிந்த ஒரு செய்தி, “மூன்று முறை சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினர் வரவில்லை என்றால், நான்காவது கூட்டத்தொடரில் அவரை பதவி நீக்கம் செய்யலாம்” என்று விதி இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு கூட்டத்திற்கு வரவில்லை. மூன்று கூட்டம், புனித ஜார்ஜ் கோட்டை யிலும், நான்காவது கூட்டம் புதிய சட்டப்பேரவை யிலும் நடைபெற்றது. இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை உங்கள் அம்மையார். காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, மக்களின் மீது கொண்ட வெறுப்புணர்ச்சி. ஆனால் திரு.பன்னீர் செல்வமாகிய நீங்கள், தலைவர் கலைஞரிடமும் அன்றைய சட்ட சபை சபாநாயகரிடமும் ஒரு கடிதம் கொடுத்தீர்களே, நினைவு இருக்கின்றதா? அந்தக் கடிதம் என்ன?
அம்மையார் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் ஆகவே கூட்டத்தில் பங்கேற் பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் தன் பதவியைக் காப்பாற்றத் துடித்த கதை இது. தலைவர் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு அந்தக் கூட்டத்தொடரில் ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, விதிவிலக்கு அளித்து உங்கள் அம்மையார் ஜெயலலிதாவிற்கு பதவியை பிச்சை போட்டது தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கழக அரசுதான்.
தலைவர் கலைஞர் அவர்கள் என்றுமே பதவியை ஒரு பொருட்டாய் கருதியது இல்லை. இந்த தமிழினத் திற்காக தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் பதவிகளை துச்சமென தூக்கியெறிந்த வரலாறு உலகறியும். அதுமட்டுமா? சட்டமன்றத் திற்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தலைவர் கலைஞர் வருகின்றார் என்று வாய்க் கிழிய யாரோ எழுதிக் கொடுத்ததை நீட்டி முழக்கியுள்ள நீங்கள், தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்கள். தன் உடல் நிலை கருதி தான் சக்கர நாற்காலியுடன் உள்ளே வந்து உட்காருவதற் கான வசதி செய்து தரப்படவில்லை யென்றும் அப்படியிருக்கையில் எப்படிதான் உள்ளே வந்து உட்கார முடியும் என்றார்.
பினாமி ஆட்சியின் பொம்மை முதல்வர் திரு.பன்னீர் அவர்களே, நீங்களும் உங்கள் ஆட்சியும் நடந்து கொண்ட விதம் இதுதான், ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் புதிய சட்டமன்றம் கட்டிய பொழுது அவர்கள் அதனை பார்வையிட்டு ஏற்கனவே பெரிதாக இருந்த எதிர்க்கட்சி தலைவர் அறையை இன்னும் பெரிதாக் குங்கள் என்றும் இந்த அறை அந்த அம்மை யாருக்கு போதியதாக இருக்காது என்றும் மற்றொரு அறையை இடித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அறை அல்ல, அரங்கத்தையே ஏற்படுத்தி கொடுத்த வர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
“தமிழ்நாட்டின் தனயன் தளபதி”
திரு.பன்னீர் அவர்களே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவர் கலைஞருக்கு மட்டும் தனயன் அல்ல, அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக தனயனாய் வீதி வீதியாய் சுற்றி மக்களை சந்திக்கின்றார். மக்கள் பிரச்சினைகளை களைய போராட்டக் களத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக மக்களின் துயர் துடைக்க வந்த அந்தத் தனயன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
மேலும் உங்கள் அறிக்கையில் நாடகம் அரங்கேற்றம் என்றெல்லாம் அறிக்கை விட்டு இருக்கும் தங்களுக்கு நான் நினைவு படுத்த விரும்புவது! தலைவர் கலைஞர் அவர்கள், திறம்பட நாடகம் எழுதி அதனை அரங்கேற்றம் செய்தார். ஆம், நாடக மன்றத்தில் மட்டும்தான். ஆனால் சட்டமன்றத்தையே நாடக மன்றமாக மாற்றிய பெருமை உங்கள் அம்மையாரையே சாரும். 1989 வரலாறு களையும் அதே நேரத்தில் நவீன கண்ணகி வேடம் போட்டு ஊர்வலம் போன நாடகக் கதையை ஊர் அறிந்தது! உலகம் பார்த்து சிரித்த நாடகம், எனக்கு நினைவுக்கு வருகின்றது. சட்டமன்றத்தை கூட்டச் சொல்வது என்பது அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது, மக்கள் பிரச்சினை குறித்து பேசத்தானே தவிர உங்கள் அம்மையாரின் பிரச்சினை குறித்து பேச அல்ல ……,
திரு.பன்னீர் அவர்களே, நீங்கள் உங்கள் கட்சி தலைவி, ஊழல் குற்றவாளி அம்மையார் ஜெய லலிதாவிற்கு அடிமைப் புழுவாக இருங்கள். அதனைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் பணியை செய்துவிட்டு மற்ற வேலைகளை செய்யுங்கள். மீண்டும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு வருகின்றேன்.
“நக்கி குடி அதையும் நல்லதென்று சொல்
ஆமைபோல அடங்கி ஒடுங்கு”
நீங்களும் சரி, உங்கள் தலைவியும் சரி, கண்ணியம் காக்க மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் நீங்கள் வகிக்கும் பொறுப்பிற்காவது கண்ணியம் காக்க வேண்டாமா? சட்டமன்றம் என்ன, மக்கள் மன்றமா, இல்லை உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?
-வழக்கறிஞர் தமிழன்பிரசன்னா